Wednesday, November 21, 2012

தேடல்


பிரிவுகள் விடாது துரத்தும்
பயம் கொண்டால் பாதை இல்லை
படிகளை செதுக்கி ஏறு
போகும் வழியில் முட்கள் நூறு
வீழும் வலியை தாங்காவிட்டால்
மழைத் துளி என்றும் ஆறாகாது
உறைவிடம் சேறாயினும்
தாமரை வெளியில் அழகுதான்
வலியின் மாயானத்தில் கிடக்கப் பழகு
அதி சக்தி மனதில் குடியேறும்
தோல்வி உனை வீழ்த்தும் சக்தியாயின்
வெற்றி என்றும் மற்றொருவனுடயதே
வாங்கிய அடிகளை படியாக்கு
தோல்விகள் கூட சூன்யம் ஆகும்
காலக் கணக்குகளை தீர்க்கும்
சூத்திரத்தைக் கற்றுக்கொள்
எதிர்க்கும் சக்திகள் கூட செயலிழக்கும்
இல்லை என்ற ஒன்று மட்டுமே
இவ்வுலகில் இல்லை
போதியவற்றை இங்கிருந்து எடுத்துக்கொள்
ஏனையவற்றை அங்கேயே விட்டுவிடு
தேடல்கள் உள்ள இதயம் இவ்வுலகில் ஏராளம்
மழை நதியாக மாறினும்
அதன் செயல் ஒன்றுதான்
உரு மாறினாலும் மனம் மாறாதே
முடிச்சுக்கள் அவிழ்க்கப் படும்வரையில்தான்
உள்ளத்திற்கு கிளர்ச்சி ஊட்டப்படும் தருணங்கள்
தேடல்கள் உள்ள வரையில்தான்
உடலில் இயக்கம் இருக்கும்...

Monday, September 3, 2012

விடை கொடு...


கடந்து செல்லும் நேரம் இதுவோ
காலம் போட்ட கட்டளை இதுவோ
மனசு போட்ட கணக்குகள் நூறு
மாற்றம் போட்ட கணக்கோ ஒன்று

கலைந்து போகும் மேகங்கள் போலே
விலகிச் செல்லும் தருணமும் இதுவே
காற்றுக்கு என்றும் விலங்குகள் இல்லை
மாற்றத்துக்கு என்றும் முடிவுகள் இல்லை

கை கோர்த்து நடந்த கைகள்
கையசைத்து விடை தரும் நேரம்
பார்த்துப் பேசிய முகங்களை இன்று
இருண்ட குகை ஒன்று மறைக்கிறதே

போன இடங்கள் அழிந்து போகலாம்
பழகிய தருணங்கள் மறைந்து போகலாம்
பேசிய வார்த்தைகள் காற்றில் கலக்கலாம்
கட்டிய நினைவாலயம் என்றும் அழியாது

ஓரிடத்திலே ஓய்வெடுத்த என் காலத்தேர்
இன்னொரு நிழலைத் தேடி விரைகின்றது
பயணமும் தூரமும் பாதையை மறைக்கலாம்
பழகிய நெஞ்சங்களை மறைக்க இயலுமா

இறந்த என் காலங்கள் மீண்டும் பிறக்காது
பழகிய தருணங்கள் மீண்டும் திரும்பாது
காலச் சக்கரம் விரைவாகச் சுழல்கின்றது
சுழற்சிக்கு இசைந்து செல்வதே எமக்களிக்கப்பட்ட கட்டளை...

Thursday, May 10, 2012

நீ எங்கே?


உனைப் பிரிந்த நாட்களை 
மரணப் படுக்கை அழைக்கின்றது
நீ இல்லா நிமிடங்களோ
இரவல் உயிரைத் தேடுகிறது
உன் கை கோர்த்த விரல்கள்
ஊனமாகி முடங்கியது
குருதி கூட நிறம் இழந்து
தண்ணீராக ஓடுகிறது

தவம் இன்றி பெற்ற உன்னை
தடயம் இன்றித் தொலைத்தேனே
காதல் கூண்டில் நானும் இன்று
மரண தண்டனைக் கைதியானேன்

தமிழில் வார்த்தை வேண்டாமடி
உன் பெயரை வைத்துப் பாட்டிசைப்பேன்
சுவாசம் இன்றி வாழும் வித்தை
உன் நினைவுகளால் கற்றுக் கொண்டேன்

உன் உதடு பதிந்த கன்னம் இன்று
பாலைவனம் ஆகியதே
உனைக் கண்டால் அகலமாகும் கண்கள் இன்று
திறக்க மறுக்கின்றதே

வாசல் வந்த காற்றைக் கேட்டேன்
உனை வருட விரும்புவதாய்ச் சொன்னது
காலை மலர்ந்த மலரைக் கேட்டேன்
உன் கூந்தலுக்கு ஏங்குவதாய்ச் சொன்னது
தென்னை மரத்தின் அணிலைக் கேட்டேன்
உன் கைரேகைக் கிழைகளில் தாவ வேண்டுமெனச் சொன்னது
அறையுள் நுழைந்த ஒளியைக் கேட்டேன்
உன் முகம் காண காத்திருப்பதாகச் சொன்னது

துணையை விட்டுத் தூரம் சென்றாய்
தூணும் இன்று சாய்ந்ததடி
மனிதனாகப் பிறந்துவிட்டேன்
அடைய வழிகள் தெரியவில்லை
மறு பிறவியிலாவது உன்னை
வந்தடையும் காற்றாய்ப் பிறப்பேன்...

Tuesday, April 17, 2012

அரைக்கருநிறப் பொழுது...


இன்று உன் முகம் காணாமலேயே
அந்திவேளை கடக்கின்றது,
இறந்தது இந்நாள் மட்டும் அல்ல
உனைக் காணாத நானும்தான்,
அரைக்கருநிறப் பொழுது முள்ளாய் நெருடியது,
இவ்வேளையிலோ வலியின் வெளிப்பாடு
அரக்கத் தனம் அடைகின்றது,
தனிமையும் மாலைவேளையும் இணைவதுதான்
காதலில் நரக நொடிகள்,
நிலவில் உன் முகம் தெரிந்தால்
மீண்டும் பிறப்பேனோ...
அமாவாசை இருள் என்னிறப்பை நீட்டிக்குமோ...
உன் முகம் காணவும்
மீண்டும் பிரசவிக்கவும்
ஒரு முழு இரவைக் கடக்க வேண்டிய கட்டாயம்,
இதுநாள் வரையில் நித்திரையுடன்
மென்மையாய் கடந்த என் இரவுகள்,
இன்று ஏனோ நடை பழகும்
குழந்தை போல் நகர்கின்றது,
காதலில் வலியா இல்லை காதலே வலியா
என்ற குழப்பமும் எனைச் சூழ்ந்துகொண்டது
மறுபிறவி எடுக்கும் முயற்சியில்
இப்பொழுது நான்!!!

Monday, January 30, 2012

தோழன்...


அவனுடன் உரையாடாமல் உறங்கியதே இல்லை
எப்பொழுதும் என் வரவுக்காக காத்திருப்பவன்
என்னுடனேயே தங்கிவிட்டவன்
முகம் புதைத்து அவன் மார்பில் படுக்கையில்
தாய்மையை உணர்த்தியவன்
கோவம் கொண்டு தூக்கி எறிந்த பொழுதும்
விழுந்த இடத்திலேயே எனக்காக காத்திருப்பவன்
அவனுக்கென உணர்வுகள் இல்லாதபோதும்
என்னுணர்வுகளை மதிப்பவன்
நான் சிரிக்கையிலும் அழுகையிலும்
கண்ணாடியாய் விளங்குபவன்
கால மாற்றத்துக்குள் அகப்படாமல்
தன்னிலை மாறாமல் இருப்பவன்
என் பாரத்தை அவன் மேல் இறக்கி வைத்த பொழுதும்
கனக்காமல் காற்றைப் போல் இருப்பவன்
போதையில் அவன் மேல் சாய்ந்த பொழுதும்
எனை வெறுக்காதவன்
எதையும் தாங்கும் இதயம் என்ற வரிக்கு
வடிவம் தந்தவன்
அவனுக்கு வயதாகி விட்டதாம்
பழுதாகிவிட்டானாம்
அலுவலகம் சென்று வீடு திரும்புகையில்
வாசலிலே குப்பைகளுடன் குப்பையாய் கிடந்தான்
உயிர் பிரியும் வழியை அன்று நான் உணர்ந்தேன்
உள்ளே சென்று பார்த்தால்
அவன் இடத்தில் ஓர் புதியவன்
அவனை பற்றிக்கொள்ள வெளியே ஓடினேன்
குப்பை சுமக்கும் ஊர்தி
அவனை சுமந்து சென்றது
எனக்கு அணையாக இருந்த என் "தலையணை"
இன்றோ நாதியற்றோர் பட்டியலில்!!!

Friday, January 20, 2012

நான் மனிதனா?


கேட்காமலேயே எனக்காக கிடைத்தது
என் ஜனனம்

அன்று நான் மகன்,எனக்கான முதல் அடையாளம்

அக்கணம் தொட்டு, நினைவை எட்டும்
வரையிலான தூரமே என் முதற் பயணம்

பழுதற்ற மூளையை பழுதாக்க எண்ணி
பயணித்த இடமோ வகுப்பறை
அன்று நான் மாணவன்

என்னினைவைச் சுமந்த இதயம் கலப்படமானது
மற்றொருவரின் நினைவைச் சுமக்க பணிந்தபோது
அன்று நான் காதலன்

"வெறுமையுடன் இருந்தால் வறுமை எஜமானகிவிடும்"
வெறும் கையை செல்வம் சுமக்க வைத்தபொழுது
நானோ உழைப்பாளி

சுயநலத்தை துறந்து பொதுநலத்தை அடைய
எல்லைக்கு புறப்பட்ட பொழுது
நான் வீரன்

இதுவரை உடுத்திய அடையாளங்கள் குறைவே
இனி உடுத்த போகும் அடையாளங்களோ பற்பல

இறந்த பின்பு நான் பிணம்

இறந்தும் பலர் மனதில் வாழ்ந்தால்
அன்று தான் நான் மனிதன்!!!

Wednesday, January 11, 2012

இரவும் நானும்


இரவு என் செயல்களை
மற்றவர்கள் நோக்காமல் மறைக்கின்றது

புரண்டு படுத்தும் உறக்கக்
கதவுகளை தட்ட முடியவில்லை

நினைவுத் தீவில் தனி
ஆளாய் நான்

ஒவ்வொரு நினைவுகளும் முந்திக்கொண்டு
எனை மேவுகின்றன

நினைவுகளைக் கொன்று நித்திரையை
அடையும் முயற்சியில் மீண்டும் தோற்றேன்

எனை ஆட்டிப்படைக்கும் சக்தியிடம்
மன்றாடினேன் நித்திரையை கொடு என்று

நினைவுகளோ ஏளனம் செய்தன
என் தவிப்பைக் கண்டு

மீண்டும் முயற்சிக்காமல் நினைவுகளின்
பாதையில் பயணித்தேன்

நடுநிசியை கடந்தபொழுது
நினைவுகள் சற்று வலுவிழந்து
அரைத் தூக்கம் எனை
ஆட்கொண்டது

சூரியவொளி தீண்டியதும் முழித்துகொண்டேன்

கண்களைக் கண்ணீர் சுடாமல்
உள்ளுக்குள் அழுதேன்
நிம்மதியான உறக்கம் கிடைக்காதவனாய்

என்ன ஆன போதும்
இரவும் நானும் நண்பர்களே
என் தவிப்பை எவரும் காணாமல்
மூடி மறைப்பதினால்...