Thursday, May 10, 2012

நீ எங்கே?


உனைப் பிரிந்த நாட்களை 
மரணப் படுக்கை அழைக்கின்றது
நீ இல்லா நிமிடங்களோ
இரவல் உயிரைத் தேடுகிறது
உன் கை கோர்த்த விரல்கள்
ஊனமாகி முடங்கியது
குருதி கூட நிறம் இழந்து
தண்ணீராக ஓடுகிறது

தவம் இன்றி பெற்ற உன்னை
தடயம் இன்றித் தொலைத்தேனே
காதல் கூண்டில் நானும் இன்று
மரண தண்டனைக் கைதியானேன்

தமிழில் வார்த்தை வேண்டாமடி
உன் பெயரை வைத்துப் பாட்டிசைப்பேன்
சுவாசம் இன்றி வாழும் வித்தை
உன் நினைவுகளால் கற்றுக் கொண்டேன்

உன் உதடு பதிந்த கன்னம் இன்று
பாலைவனம் ஆகியதே
உனைக் கண்டால் அகலமாகும் கண்கள் இன்று
திறக்க மறுக்கின்றதே

வாசல் வந்த காற்றைக் கேட்டேன்
உனை வருட விரும்புவதாய்ச் சொன்னது
காலை மலர்ந்த மலரைக் கேட்டேன்
உன் கூந்தலுக்கு ஏங்குவதாய்ச் சொன்னது
தென்னை மரத்தின் அணிலைக் கேட்டேன்
உன் கைரேகைக் கிழைகளில் தாவ வேண்டுமெனச் சொன்னது
அறையுள் நுழைந்த ஒளியைக் கேட்டேன்
உன் முகம் காண காத்திருப்பதாகச் சொன்னது

துணையை விட்டுத் தூரம் சென்றாய்
தூணும் இன்று சாய்ந்ததடி
மனிதனாகப் பிறந்துவிட்டேன்
அடைய வழிகள் தெரியவில்லை
மறு பிறவியிலாவது உன்னை
வந்தடையும் காற்றாய்ப் பிறப்பேன்...