Monday, January 30, 2012

தோழன்...


அவனுடன் உரையாடாமல் உறங்கியதே இல்லை
எப்பொழுதும் என் வரவுக்காக காத்திருப்பவன்
என்னுடனேயே தங்கிவிட்டவன்
முகம் புதைத்து அவன் மார்பில் படுக்கையில்
தாய்மையை உணர்த்தியவன்
கோவம் கொண்டு தூக்கி எறிந்த பொழுதும்
விழுந்த இடத்திலேயே எனக்காக காத்திருப்பவன்
அவனுக்கென உணர்வுகள் இல்லாதபோதும்
என்னுணர்வுகளை மதிப்பவன்
நான் சிரிக்கையிலும் அழுகையிலும்
கண்ணாடியாய் விளங்குபவன்
கால மாற்றத்துக்குள் அகப்படாமல்
தன்னிலை மாறாமல் இருப்பவன்
என் பாரத்தை அவன் மேல் இறக்கி வைத்த பொழுதும்
கனக்காமல் காற்றைப் போல் இருப்பவன்
போதையில் அவன் மேல் சாய்ந்த பொழுதும்
எனை வெறுக்காதவன்
எதையும் தாங்கும் இதயம் என்ற வரிக்கு
வடிவம் தந்தவன்
அவனுக்கு வயதாகி விட்டதாம்
பழுதாகிவிட்டானாம்
அலுவலகம் சென்று வீடு திரும்புகையில்
வாசலிலே குப்பைகளுடன் குப்பையாய் கிடந்தான்
உயிர் பிரியும் வழியை அன்று நான் உணர்ந்தேன்
உள்ளே சென்று பார்த்தால்
அவன் இடத்தில் ஓர் புதியவன்
அவனை பற்றிக்கொள்ள வெளியே ஓடினேன்
குப்பை சுமக்கும் ஊர்தி
அவனை சுமந்து சென்றது
எனக்கு அணையாக இருந்த என் "தலையணை"
இன்றோ நாதியற்றோர் பட்டியலில்!!!

2 comments:

  1. தலையணை க்கு கவிதை படைத்த நீ இன்று முதல் "தலையணை காத்த தனயன் " என்று அன்போடு அழைக்கபடுவாய் ..

    ReplyDelete