Tuesday, September 20, 2011

இறகாக நான் வருட...

பனிக்காற்றே பதமாக
வாசலிலே வீசி விடு,
நீரோடை அடங்கி விடு
சத்தமின்றி நடை போடு,
குயிலே நீ கூவாதே
இதமாக இசைத்து விடு,
இறகாக நான் வருட
என்சேயும் உறங்க வேணும்,
என் வயிற்றில் உதித்த முத்தே
மறையாத சூரியனே,
மடி மீது நீ உறங்க
என் விழியும் நனையுதிங்கே...

எந்நாளும் உனைச் சுமக்க
ஈரைந்து மாதங்களாய்
விழி மூடா இரவு கண்டேன்,
காத்திருந்து வேண்டி நின்றேன்
காணாத காட்சி எல்லாம்
உன் விழியில் கண்டு கொண்டேன்...

வம்சம் என்னும் தாவரத்தில்
பூவாக நீ மலர்ந்தாய்
தோகை என நான் அணைக்க நீ உறங்கு...

கல்லான சாமி ஒன்று
உயிர் பெற்று வந்ததிங்கே
உன்னாலே கோவில் ஆனோம்,
வாய் திறந்து பேசயிலே
புது மொழி பிறந்ததிங்கே
இன்பத்திலே மெய் மறந்தோம்

தாலாட்டு பாட நீயும்
உனை மறந்து விழி மூடு
தூளி என நான் இருக்க நீ உறங்கு...

Wednesday, August 31, 2011

தாயை மீறிய பாசமா என்ற கேள்விக்கு விடையாக வந்தவள் நீ.

தூவானம் எனை தழுவியதை நீ கொடுத்த முதல் முத்தத்தில் உணர்ந்தேன்,
இருள் மேகங்கள் என் வாழ்வில் விலகியது உன் சிரிப்பால்,
பாதை இல்லாத என் வாழ்வில் வழியாக வந்தது உன் வார்த்தைகள்,
நான் நவில்ந்தது எல்லாம் கவிதையானது தோளருகில் நீ இருந்தபோது,

சூரிய ஒளியின்றி பூமியில்லை நானும் இல்லை உன் பார்வையின்றி,
சலனமின்றி வாழ்வில் வந்தாய் அர்த்தம் சேர்த்தாய் முழுமையடைந்தேன்,
கண்ணில் காண முடியாத பாசத்தை நெஞ்சில் நிறுத்தினாய் சோகம் விலகியது,
விரைவாக முடியாதா??? என்றெண்ணிய வாழ்க்கை முடிவின்றி போகட்டும் என துதிக்க வைத்தாய்,

பாறைபோல் இருந்தேன் பறவை போல் பறக்க வைத்தாய்,
பார்க்கும் இடமெங்கும் உன்முகம்,நினைத்தால் கலங்கும் நீ இல்லாத வாழ்வை,
நீயென் அருகில் இருந்தால் புயல் கூட தென்றல்,இல்லை என்றால் பூக்கள் கூட கற்கள்,
பறந்துவிடாதே பாதியில் பரமபதம் அடைந்து விடுவேன்!!!

தாயை மீறிய பாசமா என்ற கேள்விக்கு விடையாக வந்தவள் நீ,
தனிமையில் சிரிக்க வைத்தாய்,விழியிலே நின்று நித்திரை கெடுத்தாய்,
வானத்தில் நடக்க வைத்தாய்,வாலிபம் சிலிர்க்க வைத்தாய்,
என்னவளே, என் வாழ்வின் முடிவிடம் உன் மடிதான்....

Friday, August 19, 2011

ஓவியா...
















சின்னஞ் சிறு சித்திரமே காண்பவரை மயக்கும் பூமுகமே,
நடமாடும் சிலை நீயே தரைமேல் தவழும் பால்நிலவே,
என்றும் மறையாத வானவில்லே பனி படர்ந்த ரோஜாவே,
திரைகடல் காணாத முத்தே நாகம் உமிழ்ந்த வைரமே...

மங்காத சிரிப்பலையே சோகம் விலக்க வந்த மதுநீயே,
அடங்காக் குறும்பின் முகவரியே அணைக்கச் சலிக்காத பாவையே,
மழலையின் அட்சய பாத்திரமே தேயாத பிறையும் நீயே,
கபடமற்ற மழலைப் பேச்சிலே புதுச்சொற்கள் ஜனனித்தது தமிழுக்கே!

மாதவம் செய்துபெற்ற வரம்நீயே தெய்வங்கள் காணாத சந்நிதியே,
வானகம் விட்டுவந்த நட்சத்திரமே தூளியில் உறங்கவந்த பேரின்பமே,
தாய்மை வரைந்த ஓவியமே தாய் தகப்பனின் உலகமே,
பூலோகம் போற்ற வீற்றிரு மங்காமல் என்றும் ஒளிர்ந்திடு...

Tuesday, August 16, 2011

மூன்றெழுத்தில் ஓர் உலகம்!

நீருக்குள் மூழ்கியிருந்தபோதும் நமக்காக
சுவாசித்த ஓர் இதயம்,
நீந்தியெங்கும் போய்விடாமல் இருக்க
தொப்புள் கொடியாய் ஓர் நங்கூரம்,
சுவாசிக்க கற்றுக்கொடுத்த ஓர் சுவாசம்,
கண் விழிக்கும்வரையில் கண் மூடாமல்
இருந்த ஓர் இதயம்,
வெளிவந்தபின் குருதியை உணவாய்த்
தந்த ஓர் உணவுக் கூடம்,
சுடலை வரையிலான ஓர் கானம்,
இதுவே என் பிறப்பின் பாடம்,
அம்மா எனும் மூன்றெழுத்தே என் உலகம்...