Monday, January 30, 2012

தோழன்...


அவனுடன் உரையாடாமல் உறங்கியதே இல்லை
எப்பொழுதும் என் வரவுக்காக காத்திருப்பவன்
என்னுடனேயே தங்கிவிட்டவன்
முகம் புதைத்து அவன் மார்பில் படுக்கையில்
தாய்மையை உணர்த்தியவன்
கோவம் கொண்டு தூக்கி எறிந்த பொழுதும்
விழுந்த இடத்திலேயே எனக்காக காத்திருப்பவன்
அவனுக்கென உணர்வுகள் இல்லாதபோதும்
என்னுணர்வுகளை மதிப்பவன்
நான் சிரிக்கையிலும் அழுகையிலும்
கண்ணாடியாய் விளங்குபவன்
கால மாற்றத்துக்குள் அகப்படாமல்
தன்னிலை மாறாமல் இருப்பவன்
என் பாரத்தை அவன் மேல் இறக்கி வைத்த பொழுதும்
கனக்காமல் காற்றைப் போல் இருப்பவன்
போதையில் அவன் மேல் சாய்ந்த பொழுதும்
எனை வெறுக்காதவன்
எதையும் தாங்கும் இதயம் என்ற வரிக்கு
வடிவம் தந்தவன்
அவனுக்கு வயதாகி விட்டதாம்
பழுதாகிவிட்டானாம்
அலுவலகம் சென்று வீடு திரும்புகையில்
வாசலிலே குப்பைகளுடன் குப்பையாய் கிடந்தான்
உயிர் பிரியும் வழியை அன்று நான் உணர்ந்தேன்
உள்ளே சென்று பார்த்தால்
அவன் இடத்தில் ஓர் புதியவன்
அவனை பற்றிக்கொள்ள வெளியே ஓடினேன்
குப்பை சுமக்கும் ஊர்தி
அவனை சுமந்து சென்றது
எனக்கு அணையாக இருந்த என் "தலையணை"
இன்றோ நாதியற்றோர் பட்டியலில்!!!

Friday, January 20, 2012

நான் மனிதனா?


கேட்காமலேயே எனக்காக கிடைத்தது
என் ஜனனம்

அன்று நான் மகன்,எனக்கான முதல் அடையாளம்

அக்கணம் தொட்டு, நினைவை எட்டும்
வரையிலான தூரமே என் முதற் பயணம்

பழுதற்ற மூளையை பழுதாக்க எண்ணி
பயணித்த இடமோ வகுப்பறை
அன்று நான் மாணவன்

என்னினைவைச் சுமந்த இதயம் கலப்படமானது
மற்றொருவரின் நினைவைச் சுமக்க பணிந்தபோது
அன்று நான் காதலன்

"வெறுமையுடன் இருந்தால் வறுமை எஜமானகிவிடும்"
வெறும் கையை செல்வம் சுமக்க வைத்தபொழுது
நானோ உழைப்பாளி

சுயநலத்தை துறந்து பொதுநலத்தை அடைய
எல்லைக்கு புறப்பட்ட பொழுது
நான் வீரன்

இதுவரை உடுத்திய அடையாளங்கள் குறைவே
இனி உடுத்த போகும் அடையாளங்களோ பற்பல

இறந்த பின்பு நான் பிணம்

இறந்தும் பலர் மனதில் வாழ்ந்தால்
அன்று தான் நான் மனிதன்!!!

Wednesday, January 11, 2012

இரவும் நானும்


இரவு என் செயல்களை
மற்றவர்கள் நோக்காமல் மறைக்கின்றது

புரண்டு படுத்தும் உறக்கக்
கதவுகளை தட்ட முடியவில்லை

நினைவுத் தீவில் தனி
ஆளாய் நான்

ஒவ்வொரு நினைவுகளும் முந்திக்கொண்டு
எனை மேவுகின்றன

நினைவுகளைக் கொன்று நித்திரையை
அடையும் முயற்சியில் மீண்டும் தோற்றேன்

எனை ஆட்டிப்படைக்கும் சக்தியிடம்
மன்றாடினேன் நித்திரையை கொடு என்று

நினைவுகளோ ஏளனம் செய்தன
என் தவிப்பைக் கண்டு

மீண்டும் முயற்சிக்காமல் நினைவுகளின்
பாதையில் பயணித்தேன்

நடுநிசியை கடந்தபொழுது
நினைவுகள் சற்று வலுவிழந்து
அரைத் தூக்கம் எனை
ஆட்கொண்டது

சூரியவொளி தீண்டியதும் முழித்துகொண்டேன்

கண்களைக் கண்ணீர் சுடாமல்
உள்ளுக்குள் அழுதேன்
நிம்மதியான உறக்கம் கிடைக்காதவனாய்

என்ன ஆன போதும்
இரவும் நானும் நண்பர்களே
என் தவிப்பை எவரும் காணாமல்
மூடி மறைப்பதினால்...