Monday, September 3, 2012

விடை கொடு...


கடந்து செல்லும் நேரம் இதுவோ
காலம் போட்ட கட்டளை இதுவோ
மனசு போட்ட கணக்குகள் நூறு
மாற்றம் போட்ட கணக்கோ ஒன்று

கலைந்து போகும் மேகங்கள் போலே
விலகிச் செல்லும் தருணமும் இதுவே
காற்றுக்கு என்றும் விலங்குகள் இல்லை
மாற்றத்துக்கு என்றும் முடிவுகள் இல்லை

கை கோர்த்து நடந்த கைகள்
கையசைத்து விடை தரும் நேரம்
பார்த்துப் பேசிய முகங்களை இன்று
இருண்ட குகை ஒன்று மறைக்கிறதே

போன இடங்கள் அழிந்து போகலாம்
பழகிய தருணங்கள் மறைந்து போகலாம்
பேசிய வார்த்தைகள் காற்றில் கலக்கலாம்
கட்டிய நினைவாலயம் என்றும் அழியாது

ஓரிடத்திலே ஓய்வெடுத்த என் காலத்தேர்
இன்னொரு நிழலைத் தேடி விரைகின்றது
பயணமும் தூரமும் பாதையை மறைக்கலாம்
பழகிய நெஞ்சங்களை மறைக்க இயலுமா

இறந்த என் காலங்கள் மீண்டும் பிறக்காது
பழகிய தருணங்கள் மீண்டும் திரும்பாது
காலச் சக்கரம் விரைவாகச் சுழல்கின்றது
சுழற்சிக்கு இசைந்து செல்வதே எமக்களிக்கப்பட்ட கட்டளை...

No comments:

Post a Comment