Tuesday, September 20, 2011

இறகாக நான் வருட...

பனிக்காற்றே பதமாக
வாசலிலே வீசி விடு,
நீரோடை அடங்கி விடு
சத்தமின்றி நடை போடு,
குயிலே நீ கூவாதே
இதமாக இசைத்து விடு,
இறகாக நான் வருட
என்சேயும் உறங்க வேணும்,
என் வயிற்றில் உதித்த முத்தே
மறையாத சூரியனே,
மடி மீது நீ உறங்க
என் விழியும் நனையுதிங்கே...

எந்நாளும் உனைச் சுமக்க
ஈரைந்து மாதங்களாய்
விழி மூடா இரவு கண்டேன்,
காத்திருந்து வேண்டி நின்றேன்
காணாத காட்சி எல்லாம்
உன் விழியில் கண்டு கொண்டேன்...

வம்சம் என்னும் தாவரத்தில்
பூவாக நீ மலர்ந்தாய்
தோகை என நான் அணைக்க நீ உறங்கு...

கல்லான சாமி ஒன்று
உயிர் பெற்று வந்ததிங்கே
உன்னாலே கோவில் ஆனோம்,
வாய் திறந்து பேசயிலே
புது மொழி பிறந்ததிங்கே
இன்பத்திலே மெய் மறந்தோம்

தாலாட்டு பாட நீயும்
உனை மறந்து விழி மூடு
தூளி என நான் இருக்க நீ உறங்கு...